Our Work:
ஆய்வு


இலங்கையில் LGBTIQ+ சமூகத்தினரின் நீதித் தேவைகளைப் பகுப்பாய்வு செய்யும் அறிக்கை வெளியிடப்பட்டது, சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. இந்தப் படம், அறிக்கையின் கண்டறிதல்களைப் புரிந்துகொண்டு, எதிர்கால நடவடிக்கைகளுக்கான வழிமுறைகளைத் தீர்மானிப்பதற்காகப் பங்குதாரர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் சட்ட நிபுணர்கள் ஒன்றிணைந்த முக்கிய நிகழ்வைப் பிரதிபலிக்கிறது.
இந்த அறிக்கை முக்கியமான தரவுகளை முன்வைப்பதுடன், அதிகம் பாதிக்கப்படும் மக்களின் குரல்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. நீதி என்பது சிலருக்கு மட்டுமே உரிய சலுகையாக இல்லாமல், அனைவருக்கும் உரிமையாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்காகக் கொள்கை வகுப்பாளர்கள், சட்ட நிறுவனங்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

அனைவரும் நீதியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை இருக்க வேண்டும். இருப்பினும், இலங்கையில் உள்ள LGBTIQ+ சமூகத்தினரில் பலருக்கு நீதியைப் பெற்றுக்கொள்வது இன்னும் பெரும் சவாலாகவே உள்ளது. Équité Sri Lanka அமைப்பின் “இலங்கையில் வாழும் LGBTIQ+ சமூகத்தினரின் நீதித் தேவைகளைப் பகுப்பாய்வு செய்தல் (பதிப்பு 1.0)” என்ற அறிக்கை, சட்ட ரீதியான தடைகள், கட்டமைப்பு ரீதியான பாகுபாடுகள் மற்றும் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களை ஆவணப்படுத்துவதன் மூலம் இந்த இடைவெளியைக் குறைக்க முயற்சிக்கிறது.
சமூக ஆலோசனைக் கலந்துரையாடலின்போது எடுக்கப்பட்ட இந்தப் படம், அறிக்கையைத் தயாரிப்பதில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கியமான படிநிலையை எடுத்துக்காட்டுகிறது. LGBTIQ+ சமூகத்தினருடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் வாழ்க்கை அனுபவங்களைப் பதிவு செய்வதே இதன் நோக்கமாகும்.
பல மாகாணங்களைச் சேர்ந்த 130 நபர்களின் பங்கேற்புடன், சட்ட நிபுணர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுடனான ஆலோசனைகளையும் உள்ளடக்கிய இந்த அறிக்கை, எதிர்கால உரிமைசார் செயற்பாடுகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கான அடித்தளத்தை அமைக்கிறது. நீதிக்காகப் போராடும் மக்களின் உண்மை நிலைமைகளைப் பிரதிபலிக்கும் வகையில் தொடர்ந்து மேம்படுத்தப்படும் ஓர் உயிர்ப்புள்ள ஆவணமாக இது திகழ்கிறது.

The Unseen Battle (மறைக்கப்பட்ட போராட்டம் ) அறிக்கையின் வெளியீட்டு நிகழ்வில் சமூக உறுப்பினர்கள், தேசிய பங்குதாரர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் ஒன்றிணைந்தனர். இலங்கையில் திருநர் ஆண்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெளிப்படுத்தும் இந்த அறிக்கை, அனைவரும் கண்ணியத்துடனும் சமத்துவத்துடனும் வாழக்கூடிய, பாகுபாடற்ற சமூகத்தை உருவாக்குவதற்கான விழிப்புணர்வையும் நடவடிக்கைகளையும் வலியுறுத்துகிறது.

2023ஆம் ஆண்டில், இலங்கையில் உள்ள திருநர் ஆண்களின் உண்மை நிலைமைகளை வெளிக்கொணரும் நோக்கில், Équité Sri Lanka அமைப்பு “மறைக்கப்பட்ட போராட்டம்: இலங்கையின் திருநர் ஆண்கள் சமூகத்தின் நிலைமை பற்றிய ஆய்வு” என்ற அறிக்கையை வெளியிட்டு ஒரு முக்கியமான முன்னெடுப்பை மேற்கொண்டது. சமூகத்தினரின் குரல்களும் அனுபவங்களும் உரிய முறையில் பிரதிபலிக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில், அனைவரையும் உள்ளடக்கிய செயல்முறையின் மூலம் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது.
இந்தப் படம், கித்துல்கலையில் நடைபெற்ற சமூக ஆலோசனைக் கலந்துரையாடலின் முக்கியமான தருணத்தைப் பதிவு செய்கிறது. இதில் திருநர் சமூகத்தினரும் உரிமைச் செயற்பாட்டாளர்களும் ஒன்றிணைந்து தங்களின் வாழ்க்கை அனுபவங்கள், சவால்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து கலந்துரையாடினர். அவர்களின் கருத்துகளே இந்த அறிக்கையின் அடித்தளமாக அமைந்ததுடன், அவசரமான கொள்கை மாற்றங்கள் மற்றும் சமூகத்தின் அதிகளவிலான அங்கீகாரம் தேவை என்பதையும் வலியுறுத்தின.